கே.வி.குப்பம், டிச.20: கே.வி.குப்பம் அருகே கோயிலில் அம்மன் கழுத்தில் அணிவித்திருந்த செயினை திருடிய தாய், மகளை போலீசார் கைது செய்தனர். கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கோயிலை பூட்டுவதற்கு அர்ச்சகர் மற்றும் நிர்வாகி சென்றனர். அப்போது, மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராமம் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 45 மதிக்கத்தக்க பெண் மற்றும் இளம்பெண் சுவாமி கும்பிடுவதுபோல் வந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடுவது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி கிருபானந்தன் அளித்த புகாரின் பேரில் லத்தேரி சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி வாசுகி(46), அவரது மகள் ஹாசினி(19) ஆகிய இருவரும் அம்மன் நகையை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், நேற்று காலை தாய், மகளை கைது செய்தனர்.
