வேலூர், டிச.16: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் காதல் மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை விதித்து, வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை சாலை அசோக் நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(37), கூலி தொழிலாளி. இவர் கரிகிரி பகுதியைச் சேர்ந்த நித்யா(22), என்பவரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 3 மாதத்தில் மனைவியிடம், வீட்டிலிருந்து பைக் வாங்கித் தருமாறு பால்ராஜ் கேட்டுள்ளார். மேலும், பல்வேறு வரதட்சணை கேட்டு பால்ராஜ் கொடுமைப்படுத்தி உள்ளார்.
கணவரின் கொடுமை தாங்காத நித்யா, திருமணமான 5 மாதத்தில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசில், நித்யாவின் தந்தை சேட்டு புகார் அளித்தார். அதன்பேரில் பேலீசார் வழக்குப்பதிந்து பால்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நேற்று வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட பால்ராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
