மல்லசமுத்திரம், டிச.20: மல்லசமுத்திரம் அருகே மாமுண்டி பகுதியைச் சேர்ந்தவர் அகிலா(27). இவருக்கும், சேலம் கொண்டலாம்பட்டி பெரிய புத்தூர் முனியப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கவுரிசங்கர்(31) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அகிலா தனது பெற்றோர் வீட்டிக்கு வந்து விட்டு, கணவருடன் ஊர் திரும்புவதற்காக அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். அகிலாவின் தாயார் மாதேஸ்வரி(50) என்பவரும் உடனிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான டெல்லிகுமார்(42) என்பவர் மதுபோதையில் கெளரிசங்கரிடம் தகராறு செய்துள்ளார். மேலும், சாதி பெயரை கூறி அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்கியதில் கௌரிசங்கர் மண்டை உடைந்து படுகாயமடைந்தார். தடுக்க முயன்ற சித்தேஸ்வரி மற்றும் அகிலா ஆகியோரை கீழே தள்ளியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து டெல்லிகுமாரை கைது செய்தனர்.
