திருச்செங்கோடு, டிச. 17: திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளையம் ஒன்றியம் சக்கராம்பாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சியின் சார்பில் பொது சுகாதார வளாகம் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில், 2023-24 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டிடத்தை சுற்றியும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு சுகாதார வளாகத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
