கலிபோர்னியா: அமெரிக்காவில் சவாரி செய்த இளம்பெண் மயங்கிய நிலையில் இருந்தபோது, அவரை காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இந்திய வம்சாவளி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வென்சுரா கவுண்டியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் செகோன் (35) என்பவர், அங்கு வாடகை கார் ஓட்டி வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி அதிகாலை தவுசண்ட் ஓக்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இருந்து 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அந்தப் பெண் அதிக போதையில் இருந்ததால் காரிலேயே மயங்கியுள்ளார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சிம்ரன்ஜித், சவாரி முடிந்துவிட்டதாகச் செயலியில் பதிவு செய்துவிட்டு, மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை நீண்ட நேரம் காரில் வைத்துக்கொண்டு கேமரில்லோ நகரைச் சுற்றி வந்துள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வென்சுரா கவுண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிம்ரன்ஜித் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரைக் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அந்தப் பெண் போதையில் இருந்ததால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார்; இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஓட்டுநர் இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார்’ என்று தெரிவித்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிம்ரன்ஜித்திற்கு 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடி) பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
