சென்னை : மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), தற்போதைய மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில், சொத்து மேம்பாட்டுக் கட்டிடங்களை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது சென்னையின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. இந்தத் திட்டம், தற்போது நடைபெற்று வரும் மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் தடையின்றி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பரப்பளவு: இக்கட்டுமானம் மொத்தம் 29,385 சதுர மீட்டர்
அமைப்பு: இது கோபுரம் A மற்றும் கோபுரம் B என இரண்டு கட்டிடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கட்டிடமும் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும்.
வசதிகள்: இங்கு பேருந்துகளில் பயணிகள் ஏறி இறக்குவதற்கான வசதிகள் (Bays), வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும். இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற பயன்பாட்டையும் அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தம், Bridge and Roof நிறுவனத்திற்கு ரூ.167.08 கோடி (GST உட்பட) மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் திரு. எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) திரு. டி. ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் தலைமை பொது மேலாளர்கள் திரு. டி லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர் டி. ஜெபாசெல்வின் க்ளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மை), பொது மேலாளர் திரு. ஆர். ரவிச்சந்திரன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
