சென்னை: எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட புதிய மின்சார பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் 125 தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி பணிமனையில் நேற்று காலை நடந்தது. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார்.
சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, போக்குவரத்துத்துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குனர் இராம.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து 3வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மின்சார பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.
முன்னதாக, பூந்தமல்லிக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூந்தமல்லி நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையிலும், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமையிலும், திருவேற்காடு நகர திமுக சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமையிலும் ஏராளமான திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதில், பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் , தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
