கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய மூத்த ஆலோசகர் அனுஜ்திவாரி தலைமையிலான 3 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்துக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்தனர். அவர்கள், சிபிஐ அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் சிறப்பு குழுவினர், சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் 80 அடி சாலை, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 12 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனர். நெரிசல் உருவான சூழ்நிலைகள் குறித்து சுமார் 1 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஆலோசகர் சேஸ்குமார் பாகேல் தலைமையிலான 2 பேர் கொண்ட குழுவினர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரூர் ஆர்டிஓ முகமது பைசல், டவுன் டிஎஸ்பி செல்வராஜ் உடன் இருந்தனர். பின்னர் கரூர் ஆர்டிஓ முகமது பைசல், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கலைவாணி, சுகாதார ஆய்வாளர் சிக்கண்ணன், துப்புரவு ஆய்வாளர் மார்ட்டின், பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் நீலகண்டன், போலீஸ்காரர்கள் அருண், கீதா, மகாராஜன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 10 பேர், மாநகராட்சி ஆணையர் சுதா, மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் 4 பேர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு குழு முன்பு தனித்தனியாக நேரில் ஆஜராகினர். இவர்களிடம் பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த விசாரணையின் போது அவர்கள் கொடுத்த விரிவான விளக்கங்களை வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
