12 புதிய கிராம ஊராட்சிகளில் தேர்தலுக்கு வார்டுகள் பிரிப்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம்

ஈரோடு, டிச. 19: ஈரோடு மாவட்டத்தில் 12 புதிய கிராம ஊராட்சிகளில் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிப்பது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள மலைப்பகுதி சார்ந்த 3 கிராம ஊராட்சிகளை, 12 புதிய கிராம ஊராட்சிகளாக பிரித்து மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது, ஈரோடு மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது.

கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளூர் கிராம ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற பொதுமக்கள், ஈரோடு மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டது குறித்து மறுப்பு இருந்தால், அவற்றை எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைமைச்செயலகம், சென்னை- 600 009 என்ற முகவரியிட்டு அனுப்பி வைத்தல் வேண்டும். உள்ளூர் கிராம ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற பொதுமக்கள், மேலே கூறப்படும் காலக்கெடுவிற்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால், அதை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: