மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு வசதி செய்துதர வேண்டும்

ஈரோடு, டிச. 16: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குடிநீர் மற்றும் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு பகுதியினர் மனு அளித்தனர். ஈரோடு, சித்தோடு அருகே கொங்கம்பாளையம், ஆவுடையான்காடு, கருப்பண்ணசாமி நகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு, ஒரே ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே உள்ளதால், ஒரு குடும்பத்துக்கு 3 அல்லது 4 குடம் தண்ணீர் கிடைப்பதில்லை. குடிக்கவும், பிற பயன்பாட்டுக்கும் வெகுதூரம் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, போதிய குடிநீர் இணைப்புகள் தர வேண்டும். மேலும், சாலை, தெரு விளக்குகள், சாக்கடை வடிகால் உள்ளிட்ட அடிபடை வசதிகளும் செய்து தர வேண்டும்.

பெருந்துறை, ஆர்.எஸ்.சாலை, அம்மா மெட்ரோ நகர் பகுதியினர் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் கைத்தறி நெசவாளர்களுக்காக 66 பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை. ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே நீராதாரமாக இருந்தது. தற்போது அதிலும் தண்ணீர் இல்லை. எனவே, எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் இணைப்பு தந்து, முழுமையாக தண்ணீர் தர வேண்டும். மேலு, தார்சாலை, தெரு விளக்கு, வடிகால் வசதியும் செய்து தர வேண்டும்.

கம்புளியம்பட்டி, காசிலிங்ககவுண்டன் புதூர் மக்கள் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக சரிவர தண்ணீர் விநியோகிப்பதில்லை. ஊராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை கூடுதலாக வழங்கி 10,000 லிட்டர் தண்ணீர் தொட்டிக்கு பதிலாக கூடுதலான தண்ணீர் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்து, வினியோகிக்க வேண்டும்.

பெருந்துறை, சீனாபுரம் அருகே உள்ள நிமிட்டிபாளையம் காலனி மக்கள் அளித்துள்ள மனு: நாங்கள் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கான சுடுகாட்டுக்கு, பொதுவழியில் சென்று வந்தோம். அவ்வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்து தடுத்து வைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்ல முடியாமல், வெகுதூரம் சுற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வழித்தடத்தை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்: ஈரோடு, சோலார் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்த சமீபத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் குலுக்கல் நடத்தப்பட்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஏற்கனவே உள்ள பஸ்நிலையம், ரயில் நிலைய ஸ்டாண்ட்களில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருபவர்கள், பல ஆட்டோக்கள் வைத்திருப்பவர்களுக்குத்தான் குலுக்கலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த வாய்ப்பை தந்துள்ளனர்.

எங்களை போல தொழிலாளர்கள், சவாரி இல்லாத பகுதிகளில் ஆட்டோ ஓட்டுவோருக்கு வாய்ப்பு தரவில்லை. எனவே, மறுபரிசீலனை செய்து, எங்களை போன்ற ஆட்டோ தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆறுமுகம் என்பவரிடம் நாங்கள் 15 பேர் ஏலச் சீட்டு பணம் செலுத்தி வந்தோம். அவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் எங்களுக்கு சேர வேண்டிய ரூ.67 லட்சத்தை திருப்பித் தர மறுக்கின்றனர். நாங்கள் சீட்டு பணத்தை திரும்பக்கேட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்கள் தலைமறைவாகி விட்டனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும்.

ஆர்.என்.புதூர், குறிஞ்சி நகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் இலங்கையில் இருந்து தாய்நாடு திரும்பிய மக்களுக்கு என்று இலவச வீட்டு மனை பட்டா கொடுத்து 40 வருடங்கள் ஆகிறது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. மேலும் சாக்கடை, தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. எனவே இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர ஆவண செய்ய வேண்டும்.

Related Stories: