ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்தது.
வெம்பக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்தனர். மேலும் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விளைநிலங்களில் மக்காச்சோளம், நெல் உள்ளிட்டவற்றை விதைத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று பெய்த மழையால் பட்டாசு உற்பத்தியானது பாதிப்படைந்தது.
