மானாமதுரை வட்டாரத்தில் விறகு கரியில் கோடி கணக்கில் வர்த்தகம்: தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

 

மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் விறகு உற்பத்தி அமோகமாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் இத்தொழிலை விரிவுபடுத்த விறகுகரியில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையை சுற்றிலும் இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களும், 300க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களும் உள்ளன. இக்கண்மாய்களின் உள், வெளிப்பகுதிகளை சுற்றிலும் அக்கேசியா எனும் சீமைக்கருவேல மரங்கள் இயற்கையாக வளர்ந்து வருகின்றன. இது தவிர நீர்பிடிப்பு நிலங்கள், தரிசுநிலங்கள், புஞ்சை, விவசாயம் கைவிடப்பட்ட நெல்வயல்கள் என சுமார் 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் கருவேலமரங்கள் வளர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கருவேல மரங்களின் தண்டுப்பகுதி டியூப்லைட் சுற்றளவில் வரும்போது அவற்றை வெட்டி செங்கல், ஓடு தயாரிக்கும் சேம்பர்கள், காளவாசல்களுக்கு வெட்டி அனுப்புகின்றனர். அதேபோல அரசு கண்மாய், புறம்போக்கு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வளரும் கருவேல மரங்கள் அரசால் டெண்டர் விடப்பட்டு அதிக தொகைக்கு வியாபாரிகள் ஏலம் எடுப்பதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. சராசரியாக மூன்று ஆண்டுகளில் செழித்து வளரும் கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு, இயற்கையின் தட்பவெப்ப தன்மை மாறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார தேவைகளை சமாளிக்க உதவுகிறது.

மானாமதுரை வட்டாரத்தில் மேலப்பசலை, சோமாத்தூர், சின்னக்கண்ணனூர், மானங்காத்தான், புலிக்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்ளில் விறகுகரி உற்பத்தி செய்யும் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மானாமதுரை தவிர இளையான்குடி, பார்த்திபனூர், திருப்புவனம் பகுதிகளில் தயாரிக்கும் விறகுகரி மானாமதுரைக்கு கொண்டு வரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட தரம் பிரித்து அவற்றை கரியில் இருந்து கார்பன் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு சரக்கு ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வடமாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் கரி அனுப்பபடுகிறது.

மானாமதுரை பகுதிகளில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் இந்த கரியில் இருந்து கோடி்க்கணக்கான ரூபாய்களை அள்ளித்தரும் பென்சில், கார்பன், பேட்டரி செல், பெயிண்ட், டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு விறகு கரி மூலப்பொருளாக இருப்பதால் மானாமதுரை வட்டார விறகுகரிக்கு அதிக மவுசு உள்ளது. வடமாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள போல மானாமதுரையிலும் கரியில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலை ஏற்படுத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்பை அளிக்க முடியும். மேலும் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் கார்பன் உற்பத்தி தொழிற்சாலைகளுடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு இங்கும் தரமும் கரி உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதால் மானாமதுரை பகுதியில் கரி உற்பத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பகுதியினர் கூறுகின்றனர்.

இது குறித்து மாரிமுத்து கூறுகையில், மானாமதுரை பகுதியை சுற்றிலும் விறகுகரி உற்பத்தி அமோகமாக நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கரியில் இருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்ட்ட பொருட்கள் வடமாநிலங்களில் செய்யப்படுகிறது. வடமாநிலங்களுக்கு கூட்ஸ் ரயில், சரக்கு லாரிகளில் செல்லும் விறகுகரியை அதிகவிலைக்கு வாங்கி அதனைவிட அதிக விலைக்கு மதிப்புகூட்டி வடமாநில தொழில் அதிபர்கள் விற்கின்றனர். மானாமதுரை பகுதியில் அதேபோன்ற தொழிற்சாலைகளை இங்கு ஏற்படுத்தினால் இப்பகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு கிடைக்கும். என்பதால் மானாமதுரையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: