மண்டபம்: அரியமான் பீச்சில் அரசு சார்பில் வியாபாரிகளுக்கு வசதி கேற்ப வணிக வளாக கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் அரியமான் கிராமத்தில் வடகடலில் அரியமான் பீச் அமைந்துள்ளது. இந்த பீச்சிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கடலில் படகு சவாரி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதுபோல அரியமான் பீச்சில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாக்காளர் தினம், சுற்றுச்சூழல் தினம், புகை ஒழிப்பு தினம், போதை ஒழிப்பு தினம் உள்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை பல்வேறு விதமாக நடத்தி வருகிறது. இதனை அடுத்து அதியமான் பீச் தமிழகம் பகுதிகளில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகிறது.
இந்த பீச்சில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப உணவு கடைகள், தேநீர் கடைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் உணவு கடைகள் உள்பட்ட சிறு வியாபாரிகள் சிறு சிறு தள்ளுவண்டி மற்றும் பெட்டி கடைகள் வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியமான் பீச்சில் மழை மற்றும் வெயில் காலங்களிலும் உணவு பொருள்களை பாதுகாப்பாக வைக்கவும், தரமான உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்கு வியாபாரிகள் தவித்து வருகின்றனர். அதனால் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரசு சார்பில் வணிக வளாகம் கட்டிடம் கட்டி வாடகை முறையில் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியமான் பீச் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
