ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதம் முதல் தேர்தல் நெருங்கும் வரை கிட்டதிட்ட 10 முறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி விசிட் அடித்து புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். தேர்தல் முடிவு வெளியான பின் தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 முறை மட்டுமே தமிழகம் பக்கம் எட்டி பார்த்து உள்ளார்.
தற்போது, தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் தமிழ்நாட்டு பக்கம் பிரதமர் மோடி எட்டி பார்க்க முடிவு செய்து உள்ளார். இதற்காக பிரதமர் மோடி பொங்கல் விழாக்களை மையப்படுத்தி வரும் ஜன. 13 முதல் 15ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமர் மோடி கோவையில் நடக்கும் பொங்கல் விழாவில் விவசாயிகள், பொதுமக்களுடன் பங்கேற்க உள்ளார். கடந்தாண்டு டெல்லியில் பொங்கல் விழா கொண்டாடிய பிரதமர் மோடி, தேர்தலை மையமாக வைத்து இம்முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் மோடி பங்கேற்கும் முதல் பொங்கல் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருகையின்போது ஜன. 13ம் தேதி ராமேஸ்வரம் – சென்னைக்கு வந்தேபாரத் ரயில் சேவை துவக்கப்பட உள்ளதாகவும், இதனை பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்து துவக்கி வைக்க உள்ளார்; மேலும், சீரமைக்கப்பட்ட ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனையும் துவக்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழா, புதுக்கோட்டையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழா உள்ள நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தின்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், தமிழக பாஜ முக்கிய தலைவர்களை சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ேமாடி இனி அடிக்கடி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
