அணு சக்தி துறையில் தனியாரை அனுமதிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: அணு சக்தி துறையில் தனியார் பங்கேற்பதை ஊக்குவிக்கும் ,இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு (சாந்தி) என்ற பெயரிலான மசோதாவை பிரதமர் அலுவலக ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், நேற்று விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய ஜிதேந்திர சிங்,‘‘இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியா வரும் 2047ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுக்தி உற்பத்தி இலக்கை அடைவதற்கு உதவும்.

உலகம் சுத்தமான எரிசக்தியை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அணுசக்தியின் பங்கை எரிசக்தி கலவையில் 10 சதவீதமாக அதிகரிப்பதற்கும் இது அவசியம். நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு புதிய திசையை வழங்கும் மைல்கல் சட்டம் இது’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி,‘‘அணு சக்தி விபத்து ஏற்பட்டால் அணு சக்தி உபகரணங்களை வழங்குபவர்கள் மீதான பொறுப்பை நீக்குவது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அணு சக்தி உபகரணங்கள் வழங்குபவர்களின் பொறுப்புகளை பற்றி ஒரு வார்த்தை கூட இதில் இல்லை. அணுசக்தி துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டால், வெளிநாட்டு சப்ளையர்கள் அதிகமாக இருப்பார்கள். சப்ளையரின் பொறுப்பு பிரிவை நீக்குவது இந்தியாவுக்கு எவ்வாறு உதவும்.அணுசக்தி விபத்துக்கான பொறுப்பை அணுசக்தி உபகரணங்களை வழங்குபவர்களுக்கு வழங்கிய 2010 ம் ஆண்டு அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தின் விதிகளை இந்த மசோதா நீர்த்துப்போகச் செய்துள்ளது. எனவே, மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்,கவனமாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும்’’ என்றார்.

சமாஜ்வாடி எம்பி ஆதித்யா யாதவ்,‘‘இந்த மசோதா, நாட்டின் நலனை புறக்கணித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆனது’’ என்றார்.

திமுக எம்பி அருண்நேரு,‘‘அணு சக்திக்கும் சாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாந்தி என்பது முரண்பாடாக உள்ளது. மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் , தனியார் மயமாக்கப்படும் அணு சக்தி துறை அணு சக்தி விரிவாக்கத்திற்கான ஆபத்தான பாய்ச்சல் ஆகும். பொது பாதுகாப்பு, சுற்றுசூழல்,பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி ஆகிய தேவைகளில் மூலதனத்தின் நோக்கத்தை மீற அனுமதிக்க முடியாது என்றார்.

மசோதாவை ஆதரித்து ஜேடியு அலோக்குமார் சுமன்,தெலுங்குதேசத்தின் கிருஷ்ண பிரசாத் டென்னட்டி உள்ளிட்ட ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் பேசினர். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.பின்னர்,குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories: