புதுடெல்லி: காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான காப்பீடு சட்டங்கள் திருத்த (சப்கா பீமா சப்கி ரக்ஷா) மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் விமானத்துறையை போல இதிலும் தனியார் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கங்கள் அதிகரிக்கும் என்றும், காப்பீடுக்காக வழங்கும் இந்தியர்களின் பான், ஆதார் விவரங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் என்பதால் டிஜிட்டல் மோசடிகள் அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி சக்திசிங் கோஹில் கவலை தெரிவித்தார்.
எனவே இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் எதிர்க்கட்சிகளின் அத்தனை திருத்தங்கள், கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரைக்கு பின் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட் டது.
