×

இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்

அடிலெய்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா, 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன் குவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று, 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், அடிலெய்ட் நகரில் 3வது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 10 ரன்னிலும், ஜேக் வெதரால்ட் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்னஸ் லபுஷனே 19 ரன்னில் வீழ்ந்தார். ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட நட்சத்திர வீரர் கேமரூன் கிரீன் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் அடுத்து இணை சேர்ந்த உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை 5வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கவாஜா 82 ரன்னில் அவுட்டானார்.

அலெக்ஸ் கேரி 143 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 106 ரன் குவித்து வெளியேறினார். ஜோஸ் இங்லீஸ் 32, கேப்டன் பேட் கம்மின்ஸ் 13, மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 33 ரன் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்து தரப்பில், ஜோப்ரா ஆர்ச்சர் 3, பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

Tags : Ashes 3rd Test ,England ,Aussies ,Cameron ,Alex Carey ,Adelaide ,Australia ,Ashes ,England cricket ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...