×

ஐசிசி டி20 பவுலிங் தரவரிசை: வருண் நம்பர் 1; 818 புள்ளிகள் பெற்று சாதனை

லண்டன்: டி20 பவுலிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி, இந்திய பந்து வீச்சு வரலாற்றில் உச்சபட்ச ரேட்டிங் புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஐசிசி டி20 பவுலிங் தரவரிசை சமீபத்திய பட்டியலில், இந்தியாவை சேர்ந்த வலதுகை சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்வர்த்தி, 818 புள்ளிகள் பெற்று, தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டி20 பந்து வீச்சு தரவரிசை பட்டியலில் இந்திய பந்து வீச்சாளர் பெற்ற உச்சபட்ச ரேட்டிங் புள்ளிகளாக, வருண் சக்ரவர்த்தியின் சாதனை அமைந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் 5 டி20 போட்டிகள் தொடரில், இதுவரை முடிந்த 3 போட்டிகளில் வருண் சக்ரவர்த்தி அற்புதமாக பந்து வீசி ஒவ்வொரு போட்டியிலும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தர்மசாலாவில் நடந்த போட்டியில், அவர், வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுத் தந்து 2 விக்கெட்டுகளை பறித்தார். இத்தகைய அற்புதமான பந்து வீச்சால், வருண் சக்ரவர்த்தியின் தரவரிசை புள்ளிகள் மளமளவென உயர்ந்துள்ளன. அவருக்கும், பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து வீரர் ஜேகப் டஃபிக்கும் (699 புள்ளிகள்) இடையே, 119 புள்ளிகள் இடைவெளி உள்ளது.

அதனால், டி20 போட்டிகளில் பந்து வீச்சில் அசைக்க முடியாத இடத்தில் வருண் உள்ளார். உலகளவில், டி20 போட்டி தரவரிசை பட்டியலில், இதுவரை, பாகிஸ்தானை சேர்ந்த உமர் குல் அதிகபட்சமாக 865 புள்ளிகளை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பேட்ரி 864, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 858, வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் 832, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 828, தென் ஆப்ரிக்காவின் டாப்ரியாஸ் ஷம்ஸி 827, பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 822 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

Tags : ICC T20 Bowling ,Varun ,London ,Tamil Nadu ,Varun Chakravarthy ,T20 ,ICC ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...