×

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தம் 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை

சென்னை: இலங்கை அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தள்ளதால் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அருகே நீடித்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடலின் தெற்கே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வட மாவட்டங்களில் நேற்று மழை பெய்த நிலையில், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது. பாம்பன், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, விளாத்திகுளம், மானாமதுரை, இளையாங்குடி, விருதுநகர் பகுதிகளிலும் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது.

பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, பாளையங்கோட்டை, கொற்கை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், கூடங்குளம், பத்தமடை, மணிமுத்தாறு, பாபநாசம், குற்றாலம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திண்டுக்கல் திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கி 21ம் தேதி வரையில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும்.

Tags : South Tamil Nadu ,Kumarikadal ,Chennai ,Chennai Meteorological Department ,Sri Lanka ,Sri Lanka… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்