கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்: ஐபிஎஸ்சுக்கு கிளாஸ் எடுத்த ஐஆர்எஸ்

கோவை: கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார் என்று மாஜி ஐபிஎஸ் அண்ணாமலைக்கு மாஜி ஐஆர்எஸ் பதிலடி கொடுத்து உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், மாஜி ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண் ராஜ், கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தலைவர்கள் கட்சியில் இணைவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சகோதர மனப்பான்மை உடன் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இதுதான் நிலைமை. மதுரை கள்ளழகர் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும்போது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை வழிபட செய்கின்றனர்.சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள வாவர் மசூதிக்கு செல்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்னை. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை உடன்தான் இருக்கிறார்கள்.

அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்து இருந்தால், அவர் இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார். எங்கள் தலைவர் விஜய் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை அண்ணாமலை சொல்ல தேவையில்லை. கூட்டணி தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யப்படும். தற்போது நடக்கும் கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். தவெக நிர்வாகி ஒருவர் பெண் காவலர் கையை கடித்து வைத்தது குறித்த கேள்விக்கு, ‘எங்கயோ நடந்த சம்பவத்தை வைத்து பொதுப்படையாக பேச கூடாது’ என்றார். ‘தவெக தலைவர் ஏன் இன்னும் நிருபர்களை சந்திக்கவில்லை’ என்ற கேள்விக்கு அருண்ராஜ் நேரடியாக பதில் அளிக்காமல் ஆட்சியாளர்களிடம் போய் கேளுங்கள் என்று சம்பந்தமே இல்லாமல் கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.

Related Stories: