* அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா?
* மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா என மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமென தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மதுரை கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன் 4வது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி மனு செய்த ராம.ரவிகுமார் மற்றும் அப்பீல் மனுவில் இணைந்துள்ள அரசபாண்டி ஆகியோர் தரப்பில் தெலங்கானா முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, ‘‘தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அந்த உத்தரவை நிறைவேற்றினால் பொது அமைதி சீர்கெடும் என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் கூறுவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தாமதிப்பதற்கான காரணமாகும். பொது அமைதி சீர்கெடும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பொது அமைதி என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் பொது அமைதி ஆகும். இது ஒரு சாக்குபோக்கான காரணம்.
வழிபாட்டு உரிமைகள் சட்டத்தின்படி, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைக்க முடியாது என்று வாதிட்டது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே, உள்ள பழக்க வழக்கத்தை தான் கடைபிடிக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம். ஆனால் அரசு இது தீபத்தூண் அல்ல சமணர் தூண் என்று கூறுகிறது. தர்கா தரப்பில் தங்களுக்கு சொந்தம் என்று கூறுகின்றனர்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட வக்பு வாரியம் தரப்பு வழக்கறிஞர் முபின், கடந்த கால உத்தரவுகளில் தூண் தர்காவுக்கும் சொந்தம் என பிரிவியூ கவுன்சில் தீர்ப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘பொது அமைதி சீர்கேடு என்று அரசு தரப்பு கூறியதும், மனுதாரர் தரப்பு கூறுவதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஏற்கனவே 1996ல் நீதிபதி கனகராஜ் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டுள்ளாரா? அவ்வாறு தீபத்தூண் என்ற வார்த்தை இல்லையே? மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? குறுக்கு வழியை கையாண்டது ஏன்? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா’’ என கேள்வி எழுப்பினர்.
ராம.ரவிக்குமார் தரப்பில், ‘‘இயற்கை நீதிக்கு எதிராக தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அனைத்து தரப்பையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை வரிச்சியூர், நரசிங்கம், நாமக்கல் மொடக்குறிச்சி, ஊத்துக்குளி, கீழக்குயில்குடி, சிறுமலை, மேல்மலையனூர், அரிட்டாபட்டி, குறிஞ்சிபட்டி, மேலூர், அழகர்கோவில், பழநி, மருதமலை, சுவாமிமலை, திருத்தணி, பச்சரிசி மலை, குரும்பாறை, தாடிக்கொம்பு, சிவன்மலை, சித்தர்மலை, கர்நாடகாவின் பல பகுதிகளில் தூண்களில் தீபமேற்றப்படுகிறது. இங்கு மட்டும் தான் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிள்ளையார் இல்லை. அங்கு இருப்பது அனுமான்’’ என கூறப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
