பாப்பாரப்பட்டி, டிச.18: பொது சுகாதாரத்துறை சார்பில், நடமாடும் மருத்துவ குழுவினர், பிக்கிலி கிராமத்தில் முகாமிட்டு வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து சளி, காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்து சிகிச்சை அளித்தனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி கிராமத்தில், அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், நடமாடும் மருத்துவக் குழுவினர், நேற்று கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரசன்னா தலைமையிலான மருத்துவ குழுவினர், கிராம மக்களுக்கு சளி, காய்ச்சல், அப்பகுதியில் ஏதேனும் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்தனர். மேலும், காய்ச்சல் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து, உரிய மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடமாடும் மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் பெண் ஊழியர்கள், தன்னார்வலர்கள், ரத்த பரிசோதகர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், பல்வேறு மருத்துவ உபகரணங்களை வேனில் எடுத்து சென்று வீடு, வீடாக பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
