கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்கள் எனப் பல்வேறு காரணங்களுக்காகச் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வாக்குச்சாவடி உரிமைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘வரைவுப் பட்டியலில் சுமார் 59 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரியும்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆட்சேபனைகள் இருந்தால் பிப்ரவரி மாதம் வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியை விட அதிகளவிலான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா வடக்கு சவுரிங்கி தொகுதியில் அதிகபட்ச நீக்கம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ‘வரைவுப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், முறையான விசாரணைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
