புனே: புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி தேர்தல்களில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும், தேசியவாத காங்கிரசும் தனித்தனியே போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16ம் தேதியும் நடைபெறவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, தேசியவாத காங்கிரசின் கோட்டையாகக் கருதப்பட்ட பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில், புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மட்டும் பாஜகவும், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் தனித்தனியே களம் காணும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்துள்ளார்.
இதனை நேற்று உறுதிப்படுத்திய துணை முதல்வர் அஜித் பவார், ‘மகாராஷ்டிர பாஜகவின் மூத்த தலைவராக விளங்கும் பட்னாவிஸ் எடுக்கும் முடிவு இறுதியானது; அதை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம். மாநிலத்தின் மற்ற 29 மாநகராட்சிகளில் கூட்டணி தொடரும் நிலையில், புனே பிராந்தியத்தில் மட்டும் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைக்காமல், நட்பு ரீதியிலான போட்டியில் ஈடுபடுவோம்’ என்று அவர் கூறினார். மேற்கண்ட இரு மாநகராட்சிகளிலும், பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே அசைக்க முடியாத சக்திகளாகத் திகழ்வதால், வரும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
