நாகப்பட்டினம், டிச.16: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 7 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று (திங்கள்) நடைபெற்றது. இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலிக்கருவி,1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.898 மதிப்பில் ஊன்றுகோல், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ. 15 ஆயிரத்து 750 மதிப்பில் மடக்கு நாற்காலி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
