அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின்னர் ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஞானசேகரன் சார்பில் வழக்கறிஞர் ஏ.முருகவேல் ஆஜரானார். அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்தே ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பில்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை குண்டர் சட்டத்தில் அடைத்த காலமும் முடிவடைந்துவிட்டது. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: