புதுடெல்லி: புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் தகவல் ஆணையம், அரசு அலுவலக செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தகவல் மறுக்கப்பட்டால் மேல்முறையீடுகளை கேட்டு புகார்களை தீர்த்து வைக்கிறது. இதன் தலைமை ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியா கடந்த செப்டம்பர் 13ம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ் குமார் கோயல் பெயரை, பிரதமர் மோடி, அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்தது. இதில் ராகுல் காந்தி ராஜ்குமார் கோயலை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய தலைமை தகவல் ஆணையராக கோயல் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயலுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோயல், 1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நீதித்துறை செயலாளராகவும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை செயலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
தலைமை தகவல் ஆணையரைத் தவிர, புதிய 8 தகவல் ஆணையர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 தகவல் ஆணையர்கள் பதவி வகிக்க முடியும். தற்போது ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமார் திவாரி மட்டுமே தகவல் ஆணையர்களாக உள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ஆணையர்களும் பதவியேற்கும் போது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல் ஆணையம் முழு பலத்துடன் செயல்படத் தொடங்கும்.
