3 நாடுகள் சுற்றுப்பயணம் தொடக்கம்; பிரதமர் மோடிக்கு ஜோர்டானில் உற்சாக வரவேற்பு: மன்னரை சந்தித்து ஆலோசனை

அம்மான்: பிரதமர் மோடிக்கு ஜோர்டான் நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடியை அம்மான் நகர் ஏர்போர்ட்டிற்கு நேரடியாக சென்று ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்பு அளித்தார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’அம்மான் வந்திறங்கினேன். விமான நிலையத்தில் அளித்த அன்பான வரவேற்புக்காக, ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசனுக்கு நன்றி. இந்த வருகை நமது நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். இந்தியா, ஜோர்டான் இடையே தூதரக உறவுகள் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்றது குறித்து ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் தனது எக்ஸ் பதிவில்,’ நெருங்கிய மற்றும் நீடித்த எழுபத்தைந்து ஆண்டுகால உறவுகளைப் பிரதிபலிக்கும் ஒரு பயணமாக, பிரதமர் மோடியை, ஜோர்டானுக்கு ஒரு மதிப்புமிக்க விருந்தினராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். குறிப்பாக பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே பரந்த ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

விமான நிலைய வரவேற்பை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்குள்ள ஓட்டலுக்கு சென்ற போது ஜோர்டானில் வாழும் இந்திய சமூகம் மற்றும் இந்தியாவின் நண்பர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். உள்ளூர் கலைஞர்கள் பாரம்பரிய இந்திய நடனங்களை நிகழ்த்தி, நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’ அம்மான் நகரில் உள்ள இந்திய சமூகம் அளித்த அன்பான வரவேற்பால் நான் நெகிழ்ந்து போனேன். அவர்களின் பாசம், இந்தியாவின் முன்னேற்றம் குறித்த பெருமை மற்றும் வலுவான கலாச்சாரப் பிணைப்புகள் ஆகியவை இந்தியாவிற்கும் அதன் புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான நீடித்த தொடர்பை பிரதிபலிக்கின்றன. இந்தியா-ஜோர்டான் உறவுகளை வலுப்படுத்துவதில் புலம்பெயர் சமூகம் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைனை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார், அதைத் தொடர்ந்து தூதுக்குழு அளவிலான சந்திப்பு நடைபெறும். இன்று பிரதமர் மோடியும், ஜோர்டான் மன்னரும் இந்தியா-ஜோர்டான் வர்த்தக நிகழ்வில் உரையாற்ற உள்ளனர். இதில் இரு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொள்வார்கள். அதை தொடர்ந்து ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் இணைந்து, இந்தியாவுடன் பழங்கால வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பெட்ராவிற்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஜோர்டான் இந்தியாவிற்கு உரங்களை, குறிப்பாக பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை வழங்கும் ஒரு முன்னணி நாடாகவும் உள்ளது. அந்த அரபு நாட்டில், ஜவுளி, கட்டுமானம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் பணிபுரியும் 17,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று எத்தியோப்பா செல்கிறார். அதை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு செல்வார்.

Related Stories: