புதுடெல்லி: யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து விட்டு, உயர்கல்விக்கு ஒரே ஆணையம் அமைக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியில் பெயரிடப்பட்ட இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், கல்வியை மாநில பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சி என்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் முழக்கமிட்டனர். உயர்கல்வியில் தற்போது கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கட்டுப்பாட்டிலும், பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டிலும், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு பதிலாக, உயர்கல்விக்கு என ஒரே ஆணையம் அமைக்க புதிய தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த, யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து விட்டு உயர்கல்விக்கு ஒரே ஆணையம் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா என முதலில் பெயரிடப்பட்டு பின்னர் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா என இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், விக்சிப் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதா, உயர்கல்வி, ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தரநிலைகளை மேம்படுத்துவதன் மூலம் உயர்கல்வி கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் சிறந்து விளங்க உதவுவதை நோக்கமாக கொண்டதாக அமைச்சர் பிரதான் தெரிவித்தார். மேலும், உயர்கல்வி ஆணையம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு தலைவரால் வழிநடத்தப்படும் என்றும், இந்த ஆணையத்தின் கீழ் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், கல்வி அமைச்சகத்தின் நிர்வாக வரம்பிற்குள் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎம் மற்றும் ஐஐஐடி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களும் கொண்டு வரப்படும் என்றார். தற்போது ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்கள் யுஜிசியின் கட்டுப்பாட்டில் வருவதில்லை.
ஆனாலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி பேசுகையில், ‘‘இந்த மசோதா உயர்கல்வி துறையில் அதிகப்படியான அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்க வழிவகுக்கிறது. மேலும் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கி அரசியலமைப்பை மீறுகிறது. இது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சி’’ என்றார். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி என்.கே.பிரேமசந்திரன், ‘‘மசோதாவின் பெயரை உச்சரிப்பது கூட கடினமாக இருக்கிறது’’ என்றார்.
திமுக எம்பி டி.எம்.செல்வகணபதி, ‘‘ஒன்றிய பாஜ அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் இந்தியில் மட்டுமே பெயரிடப்படுகின்றன. அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுக்கு புரியும் படியாக மசோதாவின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக இந்த மசோதா அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மசோதாவின் பல்வேறு விதிகள், ஒன்றிய அரசு தான் முடிவெடுக்கும் அதிகாரமாக இருக்கும் என கூறுகின்றன. இது அரசியலமைப்புக்கு எதிரானது’’ என்றார்.
தமிழக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ‘‘இது இந்தியை திணிப்பதற்கான மற்றொரு வழி. கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல். ஒன்றிய அரசின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இந்த மசோதாவில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை’’ என்றார். மேலும், மசோதாவை முழுமையாக படிப்பதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை என பல எம்பிக்கள் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அரசு பரிந்துரைப்பதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
* ஒரே நாளில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
உயர்கல்வி ஆணைய மசோதா தவிர, பயன்பாட்டில் இல்லாத 71 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவும், அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கான மசோதாவும் நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் இதுபோல முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ததன் மூலம் அவற்றை முழுமையாக படிக்கவும் ஆராயவும் போதிய நேரம் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவசர கதியில் விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றும் ஒன்றிய அரசு உத்திகளில் இதுவும் ஒன்று எனக் கூறினர்.
