மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர் நிறுவும் பணி தாமதம்: பயணிகள் சிரமம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதற்கட்ட வழித்தட ரயில் நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர்களை நிறுவும் பணியை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்தும் முடிக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் 54 கிலோ மீட்டர் தூரமுள்ள முதற்கட்ட மெட்ரோ வழித்தடத்தின் அனைத்து நிலையங்களிலும் கட்டுமான காலத்தில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் நிறுவப்பட்டன. ஆனால் சில நிலையங்களில் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி செல்லும் எஸ்கலேட்டர்கள் குறிப்பிட்ட இடங்களில் இல்லை. குறிப்பாக திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அரசினர் தோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், நேரு பூங்கா, தேனாம்பேட்டை ஆகிய நிலையங்களில் எஸ்கலேட்டர் பற்றாக்குறை உள்ளன. இந்த நிலையங்களில் பயணம் செய்யும் மக்கள் கூடுதல் எஸ்கலேட்டர்கள் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காலை 8.30 மணிக்கு ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும்போது, முதியவர்கள் மற்றும் பெண்கள் லிப்ட் பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மிகவும் நெரிசலாக இருக்கிறது. சில சமயங்களில் லிப்டில் ஏற கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. முதியவர்கள் மற்றும் இதய பிரச்னை உள்ளவர்களால் எப்போதும் படிக்கட்டுகளைப் பயன்படுத்த முடியாது. தினமும் நூற்றுக்கணக்கான தொழில் வல்லுநர்கள் பயன்படுத்தும் ஆயிரம் விளக்கு போன்ற நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர்கள் நிறுவுவது மிக அவசியம். 2023ம் ஆண்டின் தொடக்கத்தில், மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த பிரச்னையை கவனத்தில் எடுத்து, மேலும் எஸ்கலேட்டர்களை வாங்கி நிறுவும் பணியைத் தொடங்கியது. மொத்தம் 55 எஸ்கலேட்டர்கள் அமைக்க திட்டமிட்டு இதுவரை 22 எஸ்குலேட்டர் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் இதுவரை முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே பயணிகள் இல்லாத நேரத்தில் பொருட்களை கொண்டு வந்து நிறுவ முடியும். குறைந்த நேர கிடைக்கும் நிலையில், பணியை முடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்த மாத இறுதிக்குள், மேலும் இரண்டு எஸ்கலேட்டர்கள் நிறுவப்பட்டிருக்கும் என்று அதிகாரி உறுதியளித்தார். பிப்ரவரி 2026 இறுதிக்குள் கூடுதல் எஸ்கலேட்டர்கள் நிறுவும் பணி முடிவடையும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: