வார விடுமுறையை கொண்டாட குவிந்ததால் வைகை அணையில் மக்கள் வெள்ளம்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். அவர்கள் பட்ஜெட்டில் குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக வைகை அணை உள்ளது.

வார விடுமுறையை கொண்டாட நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். தொடர்ந்து, அங்குள்ள குட்டி ரயிலிலும் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.

Related Stories: