ஐதராபாத்: ‘கோட்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்துள்ள லியோனல் மெஸ்ஸி, நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஐதராபாத் நகருக்கு வருகை தந்தார். அவருடன், இன்டர் மயாமி அணி வீரர்கள் ரோட்ரிகோ டி பால், லூயிஸ் சுவரெஸ் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். மெஸ்ஸியை, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரவேற்று உபசரித்தனர். பின்னர் நடந்த கால்பந்தாட்ட காட்சிப் போட்டியில், ஜெர்சி அணிந்து, மெஸ்ஸியுடன் ரேவந்த் ரெட்டி ஆடினார்.
* தேனிலவை கைவிட்ட புதுமண தம்பதி
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியின்போது, தனது கனவு நாயகன் மெஸ்ஸியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற பேரார்வத்தில் தனக்கு நடக்கவிருந்த தேனிலவை ஒரு ரசிகை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடந்தது. அதற்காக தேனிலவு செல்லத் திட்டமிட்டிருந்தோம். அந்த நாளில் மெஸ்ஸியின் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடப்பதாக அறிந்தோம். அதற்காக, எங்கள் தேனிலவு திட்டத்தை கைவிட்டுவிட்டு, கொல்கத்தா வந்துள்ளோம். இருப்பினும், மெஸ்ஸியை பார்க்க முடியாதது வேதனை அளிக்கிறது’ என்றார்.
