சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த சில மாதங்களாக அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்கிறார். இதற்கிடையே அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், ‘‘எனது கணவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார். முதல்வர் பதவியை பெற எந்த கட்சிக்கும் ரூ.500 கோடி தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை’’ என்றார்.
இந்த பேச்சு சர்ச்சையானதால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியும், சித்துவுக்கும் பொதுவான பிரச்னை உள்ளது. ராகுல் காந்தி தன்னை பிரதமராக்கினால், மக்களுக்காக ஏதாவது செய்வேன் என்கிறார். சித்து தன்னை முதல்வராக்கினால் பஞ்சாப்புக்காக ஏதாவது செய்வேன் என்கிறார். ஆனால் மக்களோ, முதலில் ஏதாவது செய்து காட்டுங்கள், அப்புறம் பிரதமராகவும், முதல்வராகவும் ஆக்குகிறோம் என்கின்றனர்’’ என கிண்டல் செய்தார்.
