அஷ்காபாத்: தனியாக 40 நிமிடம் காத்திருக்க வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திடீரென ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன் ஆலோசனை நடத்திய அறைக்குள் அத்துமீறி புகுந்தார். துர்க்மெனிஸ்தான் நாட்டில் துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்ய அதிபர் புடினும் சந்தித்து கொண்டனர். அவர்கள் பூட்டிய அறையில் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே புடினை சந்திக்க அங்கு பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சென்று இருந்தார். புடினும், எர்டோகனும் பூட்டிய அறையில் தனியாக ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்ததால் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவரது குழுவினருடன் தனியாக அமர வைக்கப்பட்டார்.
சுமார் 40 நிமிடம் அவர் தனது குழுவுடன் அமர்ந்து இருந்தார். இதனால் விரக்தியடைந்த ஷெபாஸ் ஷெரிப் அங்கிருந்து திடீரென புறப்பட்டு புடினும், எர்டோகனும் ஆலோசனை நடத்திய அறைக்கு சென்றார். பாதுகாவலர்கள் சூழ்ந்து இருந்த அந்த அறைக்குள் அவர் திடீரென நுழைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தும் அவர் 10 நிமிடங்களில் வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
