*கீரணத்தம் அருகே மக்கள் அச்சம்
அன்னூர் : மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் கீரணத்தம் அருகே உள்ள குளத்தில் உற்சாக குளித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை பெரியநாயக்கன்பாளையம், இடிகரை வழியாக வெளியேறிய 3 காட்டு யானைகள் கவுசிகா நதி நீர் வழித்தடங்கள் வழியாக கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதிக்கு வந்தது.
அங்குள்ள தனியார் ஐடி பார்க் அருகே உள்ள குளத்தில் உற்சாகமாக குளியல் போட்டது. யானைகளை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து பெரிநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, குளிர்காலம் என்பதால் குளிர்வாட்டி வதைக்கும் நிலையில் யானைகள் உற்சாகமாக குளத்தில் குளிப்பதை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.இப்பகுதியில் ஏராளமான தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இரும்பு, காஸ்டிங் ஆலைகள், கல்லூரிகள் உள்ளன.
தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அனைவரும் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் 3 யானைகளையும் பயம் அறியாமல் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குட்டியுடன் 3 யானைகள் இப்பகுதிக்கு வந்தது. குட்டி யானை வளர்ந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு 3 யானைகள் வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 3 காட்டு யானைகளையும் வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
