சென்னை: டிடிஎச் சேனல் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூரை சேர்ந்த வழக்கறிஞர் டி.கே.எஸ்.காந்தி என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் டிடிஎச் சேவை மூலம் மாதம் ரூ.1099 திட்டத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலம் 350 சேனல்கள், இண்டர்நெட் மற்றும் தொலைப்பேசி இணைப்புகளை பெற்று பயன்படுத்தி வந்தேன்.
ஆனால், ஏர்டெல் நிறுவனம் மாதம் ரூ.1099க்கு பதிலாக கூடுதலாக 600 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். மேலும் இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திடம் புகார் அளித்தும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்கவில்லை. எனவே, தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை திரும்ப வழங்குமாறும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனு சென்னை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரியாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தது சேவை குறைப்பாடுதான். எனவே, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், கூடுதல் கட்டணம் 7 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 67 ஆயிரம் ரூபாயை 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
