சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழை வழங்கினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அளித்த பேட்டியில்,, ‘‘எங்கள் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். அதேபோல், இந்திய சோவியத் கலாசார கழகத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென கோரியுள்ளோம். நிச்சயம் பரிசீலிப்பதாக கூறினார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச தான் வருவோமா? ஏன் பதற்றமான செய்திகளை உருவாக்குகிறீர்கள்?. நாங்கள் முதல்வரை மக்கள் பிரச்னைக்காக சந்திக்க வர மாட்டோமா?,’என்றார்.
