தேர்வில் குறைந்த மதிப்பெண்; அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சென்னை: தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் அதிகளவில் காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த முடிந்த பருவ தேர்வில் மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சக மாணவிகள் இரவு உணவு சாப்பிட மாணவியை அழைக்க வந்த போது, அவர் படுக்கை அறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே மாணவிகள் விடுதி வார்டன் உதவியுடன் கிண்டியில் உள்ள கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அதிகளவில் காய்ச்சல் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மாணவி சுயநினைவின்றி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரைப்படி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை அளித்த புகாரின்படி கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: