×

அதிமுகவை பொறுத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி; பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: அதிமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற்றும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 100% வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சி மலரும், இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. நம்முடைய கணக்கு நமக்கு தெரியும். அடுத்தாண்டு தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். இதுபற்றி பேசினால் அதிமுக நிர்வாகிகளுக்கே சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. அதை போக்குவது என் கடமை என்பதால் சில விளக்கங்களை கொடுக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வேறு விதமாக வாக்களிப்பார்கள். அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. 2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதியில் இரண்டில் தான் வென்றோம், அப்போது 22 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது, அதில் 9 இடங்களில் நாம் வென்றோம். 2021ல் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றோம். 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிட்டது, நிலக்கோட்டை தொகுதி, நாடாளுமன்றத்தில் திமுக சுமார் 39 ஆயிரம் வாக்குகளில் வெல்கிறார்கள், அதே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 20 ஆயிரம் வாக்குகளில் வென்றோம்.

இன்று பாஜ, அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. 2024 எம்பி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33%. இந்த 41.33% என்று கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இங்கெல்லாம் வெற்றி உறுதி. 15 சட்டமன்ற தொகுதியில் 1% வாக்குதான் குறைவு, 18 சட்டமன்ற தொகுதிகளில் 1 முதல் 2% வாக்குகள் தான் குறைவு. 2021 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் ஒப்பிட்டுச் சொன்னேன். 2021ல் 75 இடங்களில் வென்றோம், இப்போது அதிமுக, பாஜ கூட்டணி அமைந்த பின் 84 இடங்களில் வென்றிருக்கிறோம். 2019ல் 2 இடங்களில் வென்று 75 தொகுதிகள் என்று சொன்னால், இப்போது 84 தொகுதிகள் உறுதி. எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும்.

அதிமுக பாஜவின் அடிமை என்கிறார்கள், அதிமுக யாருக்கும் அடிமையில்லை. அடுத்தாண்டு தேர்தலில் இங்கே வந்திருக்கும் பல நிர்வாகிகள் வேட்பாளர்களாக வாய்ப்புண்டு, தை பண்டிகையின்போது பொங்கல் தொகுப்போடு 5000 ரூபாய் தமிழக அரசு கொடுக்கலாம். 2026 தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் கவலைப்படாதீர்கள், அதிமுகவை பொறுத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி. பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,Working ,Committee ,Vanagaram, Chennai ,General Secretary ,Tamil Nadu ,
× RELATED ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை...