100 நாள் வேலை திட்டத்தில் உறவினர்களுக்கு பணி ஒதுக்கீடு

சேந்தமங்கலம், டிச.2: எருமப்பட்டி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண் பயனாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டும் மக்கள் நலப்பணியாளர், உறவினர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் கோடாங்கிப்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்க மக்கள் நலப்பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 100 நாள் வேலை உறுதித் திட்ட பெண் பயனாளிகள் நேற்று தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி தினேஷ் தலைமையில் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோடாங்கிப்பட்டி பகுதியில் 100 நாள் வேலை செய்யும் பெண் பயனாளிகளை, மக்கள் நலப்பணியாளர் தகாத வார்த்தையால் திட்டுகிறார்.

மேலும், வயதானவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். உறவினர்கள், வேண்டியவர்களுக்கு மட்டுமே அதிக நாட்கள் பணி வழங்குகிறார். வேலைக்கு வராமலேயே மாதிரி கணக்கு எழுதி, தங்களது உறவினர்களின் மீது குட்டை வேலை செய்யும் அட்டை போட்டு பணம் எடுத்துக் கொள்கிறார். இதுகுறித்து தட்டிக்கேட்டால் எங்களை மிரட்டுகிறார். எனவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உரிய விசாரணை நடத்தி புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: