வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நல விடுதி

குன்னம், நவ.28: வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமூக நல விடுதியை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நல மாணவியர் விடுதி கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மிருணாளினி வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், உயர்வுக்கு படி என மாணவர்களின் பள்ளிக் கல்விக்கும், உயர்கல்விக்கும் எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கூடிய சமூக நல விடுதி கட்டுவதற்கு உத்தரவிட்டு அப்பணிகள் முடிக்கப்பட்டு விடுதியினை திறந்து வைத்துள்ளார்கள். இந்த விடுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவிகள் நலனுக்காக லிப்ட் வசதியுடன் கூடிய வகையில் இந்த விடுதி அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேலுசாமி, வட்டாட்சியர் சின்னதுரை (குன்னம்) வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: