கிருஷ்ணராயபுரம், நவ. 27: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை மணி நகர் பொதுமக்கள் சாலை வசதி அமைத்து தர வேண்டி முற்றுகையிட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மணி நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதி அமைத்து தர வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மணி நகருக்கு செல்லும் சாலை தனிநபருக்கு சொந்தமானது என்பதாலும் அதற்கு உரிய தொகை கொடுத்து சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் விரைவில் தனிநபரின் இடம் பேரூராட்சிக்கு பெறப்பெற்று சாலை அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது மேடு பள்ளமாக உள்ள சாலையை சீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர் சசிகுமார் மாயனூர் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், மணிநகர் மக்கள் கலந்து கொண்டனர்.
