டெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. லடாக், ஜம்மு- காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய பனிப்பொழிவு பகுதிகளில் மட்டும் 2026ம் ஆண்டு அக்.1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு நாடு முழுவதும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தலைமை பதிவாளர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் மக்கள் தொகை செயல்பாட்டு இயக்குனரகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது, பெயர் மற்றும் வீட்டு நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து மட்டும் கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தரவுகளை பகுத்தாய்தல், பயிற்சியின் குறை, நிறைகளை அறிதல், தகவல்களை அச்சிடுதல், மதிப்பீடு செய்தல், களப்பணியில் உள்ள சிரமங்களை கண்டறிதல் போன்றவற்றை உணர்ந்து சரி செய்வதற்காக இந்த முன்னோட்ட கணக்கெடுப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொபைல் செயலி பயன்படுத்தப்படும் என்றும் அனைத்து பணிகளை கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல், பிரத்யேக இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

