சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிரட்டிய இரு நாட்களிலேயே அவரது கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டதால், இனி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் பிரசார பயணம் தொடங்கியது முதல் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கிறார். பின்னர் அதை அவரே மறுத்து பேசும் சூழ்நிலை உருவாகிவருகிறது. கோவையில் அவர் பிரசாரத்தை தொடங்கியபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் எப்படி கல்லூரி தொடங்கலாம். பக்தர்களின் பணம், கல்விக்கு செலவு செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதோடு, காமராஜர், எம்ஜிஆர் முதல்வர்களாக இருந்தபோது இந்து அறநிலையத்துறையின் நிதியில் இருந்து கல்லூரிகள் தொடங்கப்பட்ட தகவல்கள் வெளியாகின.
மேலும், எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த நேரத்தில் பழனி கோயிலுக்குச் சொந்தமான கல்லூரியின் கட்டிடத்தை திறந்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், கோயில் நிதியில் இருந்து கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்று தெரிவிக்கவில்லை. வீணாக செலவு செய்யக்கூடாது என்று தெரிவித்ததாக பல்டி அடித்தார். அதன்பின்னர், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் மதிப்பு இல்லை. இதனால், அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி, அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கூட்டணிக்கு வருகிறவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக அறிவித்தார். ஆனால், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என்று கூறிவிட்டனர். அடுத்த நாளே இந்தக் கட்சிகளை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதிர்ச்சியற்ற தலைவர் என்று குற்றம்சாட்டினர். இந்தநிலையில்தான், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு ஆம்புலன்ஸ் வேன் சாலையில் வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய பிரச்சார கூட்டத்தின் இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. இது திட்டமிட்டு தமிழக அரசு செய்யும் செயல் என்று குற்றம்சாட்டியதோடு, இனிமேல் என்னுடைய கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால், வந்த ஆம்புலன்சிலேயே டிரைவர் நோயாளியாக செல்வார் என்று எச்சரித்தார். அந்த ஆம்புலன்ஸ் குறித்து விசாரித்தபோது, உண்மையிலேயே நோயாளியை அழைத்துச் செல்வதற்காக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில், துறையூர் மையப்பகுதியான அண்ணா பஸ் நிலையம் முன்பும், திருச்சி-துறையூர் சாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்காக திட்டமிடப்பட்டு, அங்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
அவர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு அதிமுக கூட்டத்துக்குள் நுழைந்த 108 ஆம்புலன்சை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அதிலிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா என கட்சியினர் சோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததை பார்த்ததும், ஆத்திரமடைந்து கூச்சலிட்ட அதிமுகவினரிடம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக செல்வதாக கூறியும் அதிமுகவினர் சமாதானம் அடையவில்லை. அத்துடன் சிலர் ஆம்புலன்ஸ ஓட்டுனரை தாக்கி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலைக் கண்டித்து இன்று போராட்டம் நடைபெறும் என்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் ஒரு நபர் தனியாகவோ, கூட்டமாகவோ மற்றும் எந்த ஒரு அமைப்பின் மூலமாகவோ அரசு அவசர கால ஊர்தியின் மீதோ அல்லது பணியாளர்கள் மீதோ வன்முறையில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுவதோடு சொத்துக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத்தின் மூலமாக அபராதத்துடன் செலுத்த நேரிடும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்தில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தள்ளனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது. தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
* அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
* 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

