×

சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் அறிவித்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?: எதிர்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதை அடுத்து, அப்பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 21ம் தேதியாகும். இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மகாராஷ்டிர ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரும், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மூத்த தலைவருமான இவரை வேட்பாளராக பாஜக தலைமை நிறுத்தி உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் பெயரை நேற்று அறிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கருத்தொற்றுமையை எட்டுவதற்காக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தங்களின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில், அரசியல் சார்பற்ற ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதால், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்தின் முடிவில், பொது வேட்பாளரை ‘இந்தியா’ கூட்டணி அறிவிக்குமா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்குமா? என்பது தெரியவரும்.இந்நிலையில் பாஜ சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மும்பையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

Tags : C. B. ,India ,Radhakrishnan ,NEW DELHI ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,NDP ,India Alliance ,Vice President ,President ,the States ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...