சென்னை: சனாதனம் பற்றிய பேச்சுக்காக நடிகர் கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகரான ரவி(எ)ரவிச்சந்திரன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், சனாதானம் பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மவுரியா, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ் ஆகியோர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் பேசிய வீடியோவை நீக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் படி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள், சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் துணை நடிகர் ரவிச்சந்திரன் பேசிய வீடியோ பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
