வி.கே.புரம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு மாதமாக நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆள்அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பாபநாசத்தில் உள்ள பாபநாச சுவாமி கோயில், முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு தலையணை உள்ளிட்ட பகுதிகள் நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாகும். இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில், பாபநாசம் மற்றும் மலைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். சிறப்பு வாய்ந்த இந்த சுற்றுலா தலங்கள், இன்று ஆள்அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாபநாசம் கோயில் சாலை, மலைப்பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது. மேலும் பாபநாசத்தில் உள்ள ஓட்டல்கள், லா ட்ஜ்களும் இந்த கோடை விடுமுறை வருமானத்தை இழந்துள்ளன. காரையாறு காணிக்குடியிருப்பு மக்கள் மற்றும் மணிமுத்தாறு அருவிக்கு மேல் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசதிக்காக அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.