சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா முரளி, லீலா நடிக்கும் படம், ‘புறநானூறு’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், தனது 25வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர்கள் திடீரென்று விலகி விட்டனர்.
‘அமரன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இது அவர் இசை அமைக்கும் 100வது படம். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய கதை கொண்ட இப்படத்தின் அறிவிப்பில், ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.