1999ல் சென்னை மத்திய சிறையில் நடந்த பரபரப்பான ஒரு சம்பவத்தை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து, ‘சொர்க்கவாசல்’ ஆக்கியுள்ளனர். சென்ட்ரல் ஜெயிலில் பாக்சிங் தெரிந்த பிரபல ரவுடி சிகா என்கிற சிகாமணி (செல்வராகவன்), திருந்தி வாழ முடிவெடுத்து, ஆதரவாளர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்கிறார். செய்யாத ஒரு கொலைக்குற்றத்துக்காக சிறைக்கு வருகிறார், ரோட்டோரம் தோசைக்கடை முதலாளி பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி). சிறையில் நடக்கும் குற்றச்செயல்கள் அவரைக் கொடூரமாக சோதிக்கின்றன. இதனால் அவரது வாழ்க்கை திசை மாறுவதே மீதிக் கதை.
பா.ரஞ்சித் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இயக்கியுள்ளார். சிறையின் கோரமுகத்தை இவ்வளவு விரிவாக யாரும் சொன்னதில்லை. பார்த்திபனாக, ஆர்ஜே பாலாஜிக்குள் இருக்கும் குணச்சித்திர நடிகனை மட்டுமே பார்க்க முடிகிறது. அடிக்கடி கத்தினாலும், கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அவரது தாயாக பொற்கொடி, காதலியாக சானியா ஐயப்பன், நண்பனாக காகா கோபால் இயல்பாக நடித்துள்ளனர்.
அசிடிட்டி பிரச்னையால் அவதிப்பட்டாலும், ஒவ்வொருவரையும் துருவித்துருவி விசாரிக்கும் அதிகாரி நட்டி, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிகாவாக செல்வராகவன், போலீஸ் கட்டபொம்மனாக கருணாஸ், சுனில் குமாராக ஷராஃபுதீன், டைகர் மணியாக ஹக்கீம் ஷா, கெண்ட்ரிக்காக சாமுவேல் ராபின்சன் மற்றும் பாலாஜி சக்திவேல், ரவி ராகவேந்திரா, ஷோபா சக்தி என்கிற அந்தோணி தாசன் யேசுதாசன், ஹோம் மினிஸ்டர் சந்தானபாரதி ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கலை இயக்குனர் எஸ்.ஜெயச்சந்திரன், எடிட்டர் செல்வா ஆர்.கே., இசை அமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் சுப்பராயன் என்று, மெகா கூட்டணி அமைத்து, சிறைக்கலவரங்களை கண்முன் கொண்டு வந்து கதிகலங்க வைத்திருக்கின்றனர். முதல் பாதி சற்று தடுமாறியதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.