×

ஜீப்ரா – திரை விமர்சனம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ் நடிக்கும் திரைப்படம் ‘ஜீப்ரா’. இந்தப் படத்தில் தாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வங்கி பணியாளராக சூர்யா ( சத்ய தேவ்) அவரது காதலியான சுவாதி( பிரியா பவானி சங்கர்) அவரும் இன்னொரு வங்கியில் வேலை செய்து வருகிறார். அவரும் அவர் உடன் பணிபுரியும் நபரும் இணைந்து செய்த ஒரு தவறால் ஒருவருக்கு செல்ல வேண்டிய ரூ. 4 லட்சம் இன்னொருவர் கணக்கில் கிரெடிட் ஆகிவிடுகிறது. இதனை சரி செய்ய தனது வங்கியை பயன்படுத்துகிறார் சூர்யா. ஆனால் தொடர்ந்து சூர்யாவின் பெயரில் ஐந்து கோடி இன்னொருவர் கணக்கிலிருந்து எடுத்ததாக ஆதாரங்கள் உடன் ஆபத்தான பிரச்சனைகளும் வந்து சேர்கின்றன. முடிவு என்ன என்பது மீதிக்கதை.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு போய் உட்காரும் அத்தனை பேருக்கும் படம் முழுக்க ஆச்சர்யங்கள் காத்திருக்கும்.  ‘ லக்கி பாஸ்கர் ‘ படம் பாணியில் இன்னொரு வாங்கி அடிப்படையிலான கதை . வங்கி சேவை,  நிதி மோசடி, எங்கே பார்த்தாலும் கணினியில் தட்டப்படும் நம்பர்கள் என இருந்தாலும் திரைக்கதையில் எங்கும் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வண்ணம் அடுத்தடுத்து சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.

நடிகர் சத்யதேவ் … பொதுவாக தெலுங்கு நடிகர்கள் தங்களை விடவும் மற்ற நடிகர்களுக்கு மாஸ் காட்சிகள் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் படத்தின் வில்லனாகவும் ஒரு கட்டத்தில் படத்தின் இன்னொரு நாயகனாகவும் மாறும்  தனஞ்செயா ஒரு பக்கம் மாஸ் காட்டி இவரை ஓடவிட்டாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து நடிப்பில் அசத்துகிறார்.

கன்னட நடிகர் தனஞ்ஜெய் ஸ்டைல் மாஸ் என அவரையும் சோடை சொல்ல முடியாத நடிப்பு. கண்களில் வகுப்பெடுத்து கணக்கு விளையாட்டு விளையாடுகிறார். சத்யராஜ் மூன்றாவது நாயகன் அவரே என்கிற ரீதியில் பாபாவாக பட்டைய கிளப்புகிறார். சுனில், சத்யா இருவருமே படத்தின் சீரியஸ் மொமெண்டகளுக்கு மட்டுமின்றி காமெடி சம்பவங்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள். பல காட்சிகளில் அரங்கம் குதூகலமாக ரசிப்பதையும் காண முடிகிறது. பிரியா பவானி ஷங்கர் தெலுங்கில் மிகச் சில படங்களில் நடித்தாலும் கவனமாக கதைகளை தேர்வு செய்வது தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படமும் தெலுங்கில் அவருக்கு நன்மதிப்பை உண்டாக்கும்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவில் சண்டை காட்சிகள், பாடல்கள் அருமை. அதிலும் நம் தேவைக்கு வங்கிக்கு சென்றாலே எப்போது வேலையை முடித்துவிட்டு வெளியே செல்வோம் என யோசிக்க வைக்கும் . ஆனால் இங்கே வங்கி காட்சிகள் கொஞ்சம் கூட சலிப்பின்றி அதீத புத்தி சாலித்தனமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரவி பஸ்ரூர் இசையில் சில பாடல்கள் டப்பிங் என்பதையும் மீறி நம்மை ரசிக்க வைக்கின்றன. ‘ வாயா நைனா …’ பாடல் நக்கலின் உச்சமாக நிச்சயம் இணையத்தில் டிரெண்டாகும் .

எடிட்டர் அனில் கிரீஷ் … பாராட்டுகள். மொத்த படத்திலும் ஹைலைட் அவர்தான். பார்வையை திருப்ப விடவில்லை. ஆங்காங்கே வரும் கெட்ட வார்த்தைகள், ஓரிரு பாடல்கள் தவிர்க்க வேண்டியவை. ஆனால் அதுவும் பெரிய இடையூறாக தெரியவில்லை.

பணம் பரிவர்த்தனை அத்தனையும் காகிதங்களைக் கடந்து இன்று வெறும் நம்பர்களாக மாறிவிட்ட நிலையில் இந்தப் படம் பல எச்சரிக்கைகளை நமக்கு கொடுக்கிறது.

மொத்தத்தில் பணத்திற்கான ஓட்டம், வங்கி கணக்கு, திருட்டு இதை எல்லாம் அடிப்படையாகக் கொண்ட படங்கள் விரும்பிப் பார்க்கும் மக்கள் நிச்சயம் இந்தப் படத்தை தவறாமல் பார்க்கலாம்.

Tags : Sathya Dev ,Iswar Karthik ,Old Town Pictures ,Padmaja Films Pvt. ,Thali Dhananjaya ,Priya Bhavani Shankar ,Jennifer Picinato ,Sunil ,Sathyaraj ,Garuda… ,
× RELATED திரில்லர் கதையில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர்